Monday, July 8, 2024

நல்ல நல்ல நிலம் பார்த்து...

carmel_ngl 

நல்ல_நல்ல_நிலம்பார்த்து 
-------------------------------
ஜெஸ்வின்..

ஆறாம் வகுப்பில் புதிதாக சேர்ந்த அன்பு குழந்தை. 
அப்பா பிரிந்து சென்ற பின்பு அம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருபவர். 
குழந்தைகளுக்கு கல்வி தடைப்படக் கூடாது என்ற ஒரே காரணத்தினால் தன் சக்தியையும் மீறி விடுதியில் மாணவர் சேர்த்து படிக்க வைத்துள்ள அவரது தாயார். 
மற்ற இரு குழந்தைகளையும் கருணை இல்லத்தில் சேர்த்து விட்டு ஒரு இல்லத்தில் தங்கி அங்குள்ள வீட்டு வேலைகளை செய்து வருகின்றார். அவருக்கு வேறு வழி இல்லை. 
தன் குழந்தைகள் எவ்வாறாவது ஆளாக்கி விட வேண்டும் என்ற ஒரே கவலை தான் அந்த தாயை இது போன்ற வேலைகளுக்கு தள்ளி உள்ளது. 
வீட்டு வேலை எவ்வளவு கடினமானது என்பது நான் கூறி தெரிய வேண்டியது இல்லை. 
குழந்தைகளைப் பிரிந்து அவராலும் இருக்க முடியாது. 
ஆனால் காலமும் சூழலும் அத்தகைய நிலைக்கு அவரை தள்ளி உள்ளது.

அதுபோல குழந்தைகளும் தன் தாயைப் பிரிந்து இருப்பது மிகவும் கடினமான செயல் தான்.
தாயாரை , தன் சகோதரிகளை பிரிந்து
கல்வியில் முழு கவனத்தை செலுத்த இயலாததால் செல்வின் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பார்! 
அவரை அமைதிப்படுத்துவதற்குள் எனது பாடவேளை கடந்து சென்றிருக்கும்! 
ஆனாலும் அவன் மீது அன்பும் அக்கறையும் கொண்டு அவனை தொடர்ந்து கல்வியின் பால் கவனம் செலுத்த எனது முயற்சி தொடர்ந்து கொண்டே இருந்தது.

பிற பாட ஆசிரியர்களை 
அவன் மீது கவனத்தை செலுத்த கூறினேன். 
ஆற்றுப்படுத்தினரிடம் அனுப்பியும் அவனை ஆற்றுப்படுத்தினேன். 
இனிப்புகளை அவனுக்கு வழங்கியதுடன் அவன் கையால் மற்ற மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி மற்ற மாணவர்களை அன்பும் அரவணைப்பும் அவனுக்கு கிடைக்க வழி செய்தேன்! 
அவன் செய்த சிறிய செயல்களுக்கும் மாணவர்களை கைதட்டி பாராட்ட வைத்தேன். 
அம்மா படும் கஷ்டங்கள் நீ படித்து ஆளாகி அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற அவனது எதிர்நோக்கை எடுத்துரைத்தேன்! 
எறும்பூரக் கல்லும் தேயும் அல்லவா? 
ஜஸ்வின் மனமும் இளகியது.
அழுமூஞ்சியான அவன் முகத்தில்  சிறு புன்னகை அரும்பியது.
தற்போது பள்ளியில் தொடர்ந்து படிக்க இசைவு தெரிவித்துள்ள ஜெஸ்வினுக்கு பாராட்டுக்கள்! 

100% இருளடைந்து இருப்பதில்லை மனம். 
எங்கு ஒரு சில இடங்களில் ஒளி இருக்கத்தான் செய்யும். 
அந்த இடத்தை அறிந்து கொண்டு அங்கு நாம் அக்கினி தீபத்தை ஏற்றினோம் என்றால் நிச்சயம் உடல் முழுவதும் ஒளி வீசலாம். 

"நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்..."