Thursday, August 29, 2024

அன்பு என்ற பெயர் கொண்டோனே....

அன்பு_என்ற_பெயர்கொண்டோனே...

அறிவியல் மனப்பான்மை செயல்:

குடிகார தந்தையால் 
பள்ளியிலிருந்து இடைநிற்கும் சூழல்...
அறிவியல் இயக்கத்தின் ராஜாக்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர்
திருமதி தேவிஅக்கா அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க
குழந்தை பாதுகாப்பான விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதற்கான கல்வியும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று ஒரு மகிழ்ச்சியான நாள்.

சில
பெற்றோர்களுடைய
பொறுப்பற்ற தன்மையினால். பாதிக்கப்படுவது குழந்தைகளே.
"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே
அவள் நல்லவனாவதும் தீயவனாவதும்
அன்னை வளர்ப்பினிலே"
என்கின்ற பாடல் வரி
உண்மையே.
அன்னையாக இருக்க வேண்டிய ஆசிரியர்களும்
EMIS இன்  பின்பும்
தேர்வின் பின்பும்
பதிவேடுகளின் பின்பும்
ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
குழந்தைகளை ஏதாவது உரிமையுடன் கண்டித்தால் கூட
அவர்கள் மீது
சமூகமும் சட்டமும்
எடுக்கும் நடவடிக்கைக்கு
ஆளாக்காமல் இருக்க
பாரா முகமாக
கடந்து செல்லும் நிலைகளை தான் கல்வித் துறைகளில் பார்க்கின்றேன்.
அன்புக்காக,
அறிவுக்காக
ஏங்கும் குழந்தைகள்
வயிற்றுப் பிழைப்புக்காக
குடும்பச் சூழல் என்னும்
ஒற்றை வார்த்தைக்கு
தடம் மாறியும்
தடுமாறியும்
சென்று கொண்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மட்டுமே
அனைத்துக்கும் விடையாக பார்க்கப்படுவதால்
இயற்கை நுண்ணறிவு
ஓரமாக நின்று  கொண்டுள்ளது.

புள்ளி விவரங்களுக்கு மட்டுமே அவை பயன்படுகின்றன.

பல புள்ளி விவரங்கள் தவறாகவும் 
பதிவேற்றம் செய்யப்படக்கூடிய நிலை.

குழந்தைகள் நான்கு நாட்கள் ஐந்து நாட்கள் பள்ளிக்கு வராத சூழ்நிலையில்

" டிசியை    வாங்கிக் கொண்டு வேறு பள்ளிக்கு போ..."
இந்த வார்த்தைகள் சர்வசாதாரணமாக வந்து விழுகின்றன.

பிரச்சனைகளின் மூலம்
நிர்மூலமாகவே நிற்கின்றது.

முதல் பருவத்திற்கு ஒரு பள்ளி
இரண்டாம் பருவத்திற்கு மற்றொரு பள்ளி
மூன்றாம் பருவத்திற்கு வேறு ஒரு பள்ளி
என்று புலம்பெயரும் மாணாக்கர்கள் சிலர்...

இன்றும் இந்த சிறுமியும் இவரது தம்பியும் இதுபோல் புலம்பெயர்ந்து வந்தவர்களே.

விடுதி உள்ள இடங்களில் என் குழந்தை படித்தால் போதும்
அவர்கள் நல்ல கல்வி கற்றுக் கொள்வார்கள்
என்ற தாயின்
நிலைப்பாட்டை பார்க்கும் போதும்...
வலை கம்பெனியில்
வேலை செய்தாவது
என் குழந்தையை நான் படிக்க வைப்பேன்
என்ற உறுதிப்பாடும்...
பாராட்டத்தக்கவை.

கடந்த சனிக்கிழமை இந்த குழந்தைகளுடன் நானும் அறிவியல் இயக்கம் மாவட்ட செயலாளர் சிவ ஸ்ரீ ரமேஷ் அவர்களும் உரையாடிய பின்பு
திங்கள் கிழமை விடுதி உள்ள பள்ளியில் சேர்ப்பதாக முடிவு செய்யப்பட்டது.

இவரையும். இவரது தம்பி நாலாம் வகுப்பு படிக்கும் குழந்தையும்
அந்தக் காப்பகத்தில் விட்டு வந்த போது
அவர்களது தாயார் கண்களில் கண்ணீர் வந்ததோ இல்லையோ..
என் கண்கள் குளமாகின.

மனிதத்தை தேடிய கல்வி பயணத்தில்
முற்போக்கு அமைப்புகள்
கரம் கோர்த்து பயணிக்க வேண்டிய காலகட்டம்.

ஜே ஆ. டோமினிக் ராஜ்,
கல்வி உபகுழு பொறுப்பாளர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ,கன்னியாகுமரி மாவட்டம்.

நல்ல உள்ளங்களின் உதவிகள்
எதிர்பார்க்கப்படுகின்றது.

Tuesday, August 27, 2024

அறிவியலுக்கான அணிவகுப்பு

அறிவியலுக்காக அணிவகுப்போம்!
🏌️🏌️🏌️💦🧙
ஆறாம் வகுப்பு முதல் பருவம் இயல் 3 அறிவியலால் ஆள்வோம்
என்ற பாடத்திற்கான செயல்பாடு. 
27.08.2024
---------------------------------
ஆறாம் வகுப்பு  
தமிழ் பாட செயல்பாடாக அறிவியல் முழக்கங்களை தனித்தனியாக பதாகையில் எழுதி வர பணிந்திருந்தேன். 

மூன்று நாட்கள் விடுமுறை முடிந்து இன்று ஆர்வமுடன் ஒவ்வொரு மாணவரும் 
அவர்களுக்குத் தெரிந்த அறிவியல் முழக்கங்களை அவர்கள் கையெழுத்தில் அழகுற எழுதி வந்திருந்தனர். 

வரிசையாக வகுப்பறைக்கு வெளியே அழைத்துச் சென்றேன். 

பள்ளி வளாகத்தில் அந்த பதாகையை ஏந்தி அமர்ந்திருந்தனர். 

எங்கள் பள்ளியின் ஆற்றுப்படுத்துநர்
அருட்தந்தை எலியாஸ் சே.ச.
அவர்களை அழைத்து 
மாணவர்களிடம் ஒரு ஐந்து நிமிடம் உரையாற்ற வேண்டும் என்று கூறியதும்...
'எதைப் பற்றி 'என்று கேட்டார்? 
"வாருங்கள் எங்கள் மாணவர்களைப் பார்த்தவுடன் உங்களுக்கு தெரியும் ...
எதைப் பற்றி பேச வேண்டும் என்று..." கூறி அழைத்துச் சென்றேன். 

ஆறாம் வகுப்பு மழலை மாறாத முகம்...
ஆனால் ஒவ்வொரு குழந்தைகள் கையில் பிடித்திருந்த பதாகையை அவர் வாசிக்கச் சொன்னார். 

"அறிவியல் மக்களுக்கே!" என்றார் ஒருவர்...
"என் வழி அறிவியல் வழி "என்றார் மற்றொருவர்.

"ஏன் என்று கேள்.."
இது மற்றொருவர்..

"அறிவியல் சிந்தனை கொள்! "

"ஆய்வில் மூழ்கு..."

"அறிவியலை ஆக்கத்திற்காகப் பயன்படுத்துவோம்..."

என்று வரிசையாக அவர்கள் அவர்களுக்கு உரிய தொனியில் 
முழங்க அருட்தந்தை முகத்தில் ஆனந்தம். 

அவரும் அறிவியல் குறித்து உரையாட தொடங்கினார். 

அறிவியல் என்பது சமூக மாற்றத்திற்கான 
கருவி. 
ஏன் ?எதற்கு? எப்படி? என்ற வினாக்கள் கேட்பதன் வாயிலாகவே அறிவியல் வளர்ச்சி அடைகிறது. இன்று ஏராளமான 
புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி வருகின்றன. 
நீங்களும் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பவர்களாக மாற வேண்டும்.

அத்துடன் 
உங்கள் வகுப்பிற்கு யாராவது மாணவர் ஒருவர் தொடர்ந்து வரவில்லை என்றால் அவர் ஏன் வரவில்லை? என்ற கேள்வியை எழுப்பி அதற்குத் தீர்வு காண முயல வேண்டும். 

எப்போதும் ஜாதி மதம் கடந்து அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். 

ஏன் ஆப்பிள் மேலே செல்லாமல் கீழே விழுகின்றது? என்று கேட்டதால்தான் 
புவியீர்ப்பு விசையை நியூட்டன் கண்டுபிடித்தார். 
ஏன் பறவையைப் போல நம்மால் பறக்க முடியவில்லை? என்று கேட்டதால்தான் 
ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடித்தனர்.

அம்மா சமையல் செய்யும்போது 
பாத்திரத்தின் மூடி ஏன் வெளியே தள்ளிக் கொண்டே இருக்கின்றது.? 
அதற்கான சக்தி என்ன? 
என்று கேட்டதால்தான் நீராவி என்ஜின் கண்டுபிடிக்கப்பட்டது. 
எனவே நீங்களும் கேள்வி கேளுங்கள். 
உங்கள் ஆசிரியரிடம், உங்கள் பெற்றோரிடம், பெரியவர்களிடம், உங்கள் கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளை கண்டறியும் போது நீங்களும் ஒரு விஞ்ஞானிகளாக உருவாகலாம். 
என்று அழகாக எடுத்துரைத்தார்.

மாணவர்கள் அனைவரும்  அறிவியல் முழக்க
பதாகையை  ஏந்தி
வளாகத்தில் முழக்கம் எழுப்பி வலம் வந்தனர். 

அறிவியலுக்காக அணிவகுத்து நின்றனர். 

இறுதியில் 
அறிவியல் மனப்பான்மை தின உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்! 

தமிழ் பாடம்தான்.
வெறும் A-4 தாளில்
செயல்பாடுகளை முடித்து விடாமல் 
அதனை அறிவியல் களச் செயல்பாடாக மாற்றி அனைத்து குழந்தைகளையும் அறிவியல் முழக்கம் எழுப்பி உறுதிமொழி எடுக்க வைத்தது சிறந்த செயல்பாடாக அமைந்தது. 

அனைவருடைய முகத்திலும் புன்னகை கலந்த நம்பிக்கையைக் காணும் போது நிச்சயம் இவர்கள் 
அறிவியலை   ஆள்வார்கள்...
அறிவியல் மனப்பான்மையுடன் 
வாழ்வார்கள்...
 என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. 
👍
--- ஜே.ஆ.டோமினிக் ராஜ்.
தமிழ் ஐயா.🤝

Wednesday, August 14, 2024

கார்மலில் 78 - ஆவது சுதந்திர தின விழா.

கார்மல் பள்ளியில் 78 -ஆவது சுதந்திர தின விழா. 
14.07.24.



நாகர்கோவில் ஆகஸ்ட் 14:
நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டப்படது.
இறைவணக்க பாடல் பாட  ஆசிரியர் திரு சுஜின் அனைவரையும் வரவேற்றார்.


 மாணவர் அர்சத் அகமது சுதந்திர தின உரையாற்றினார். அரசு தேர்வுத்துறை உதவி இயக்குநர் திருமதி N.சுதா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.


விடுதலைக்கு பாடுபட்ட பல்வேறு தலைவர்களை எடுத்துக் கூறி அவர்களது தியாகங்களால் தான் நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க முடிகிறது. 
படித்தவர் படிக்காதவர் ஏழை பணக்காரர் ஆண்கள் பெண்கள் என்று அனைவரும் விடுதலை வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
தற்போதுள்ள சூழ்நிலையில் ஜாதி மதம் இனம் கடந்து இந்தியர் என்ற ஒற்றுமையுடன் வாழ நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். 
இயற்கை வளங்களை பாதுகாத்து பராமரிக்க வேண்டும். 
மாணவர்கள் ஒழுக்கத்துடன் நல்ல கல்வி கற்று உயர்ந்த நிலைக்கு வர வேண்டும். 
என்று தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார். 



சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.


ஆசிரியர்கள் S. மெர்லின் மற்றும் J. ஆல்வின் ஆகியோர் சுதந்திர தின பாடல் பாடினார். 


மாணவர்களின் நடனம் நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள் சுதந்திர தின உணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தன.
ஆசிரியர் அலுவலர் செயலர் திரு. ஜாண் பிரிட்டோ அவர்கள் முன்னிலை வகித்தார்.



பள்ளித் தலைமை ஆசிரியர் அருட்தந்தை S.மரிய பாஸ்டின் துரை சே.ச.
அவர்கள் தலைமை உரையாற்றினார்.

ஆசிரியர் திரு.S.ரெக்ஸ் நன்றி கூறினார். 

நாட்டுப்பண்ணுடன்
விழா நிறைவுற்றது. 
ஆசிரியர்கள் திரு ரெக்ஸ், திரு.வில்சன்,திரு.சுஜின்,திரு.பிரான்சிஸ்  சேகர்,திரு.ஜெகசீலன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.