Sunday, December 4, 2022

கார்மல் பள்ளி NCC மாணவர்கள் கடற்கரையை தூய்மை செய்யும் செயல்பாடு

கடற்கரை தூய்மை பணியில் கார்மல் பள்ளி என. சி. சி. மாணவர்கள்.
_____________________
நாகர்கோவில் டிச. 04:
சர்வதேச கடற்கரை பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் மைய அரசின் சார்பில் தேசிய மாணவர்
 படையினருக்கு  
" புனித் சாகர் அபியான்" என்ற பெயரில் “தூய்மையான கடற்கரை - நெகிழி குப்பைகள் இல்லா கடல்” என்ற தலைப்பில் கடற்கரைதூய்மைப் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


கார்மல் மேல்நிலைப்பள்ளி என்சிசி மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை மரிய பாஸ்டின் துரை சே. ச. அவர்கள் வழிகாட்டுதலில் என்.சி.சி இயக்குனர் அருள்ராஜன் அவர்கள் நூறு என்.சி.சி.மாணவர்களை அழைத்துக் கொண்டு மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சியில் உள்ள சுற்றுலா தலமான சங்குத்துறை கடற்கரை பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். கார்மல் பள்ளி என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் ரெக்ஸ் அனைவரையும் வரவேற்றார். அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் லெஸ்லி , கார்மல் பள்ளி உதவித் தலைமையாசிரியர் அருட்தந்தை யேசு நேசம் சே. ச.ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணை தலைவர் டோமினிக்ராஜ் கடற்கரையின் தூய்மைகள் குறித்து எடுத்துரைத்தார்.
 அறிவியல இயக்கத்தின் ராஜாக்கமங்கல ஒன்றிய தலைவர் தாமோதரன் மாணவர்களுக்கு நெகிழி பொருட்களின் தீமைகள் குறித்து எளிய செயல்பாடுகள் மூலம் எடுத்துரைத்தார். பின்பு மாணவர்கள் கடற்கரை பகுதிகளில் உள்ள மக்கும் குப்பை மக்காத குப்பைகளை சேகரித்து அவற்றை தரம் பிரித்து உரிய குப்பை தொட்டிகளில் போட்டனர். 
நிகழ்வில் ஆசிரியர் மகிபன், புத்தன்துறை பங்கு பேரவை உறுப்பினர் சேவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர். என். சி. சி. இயக்குனர் அருள்ராஜன் நன்றி கூறினார்.

Friday, December 2, 2022

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கார்மல் பள்ளி மாணவர்கள் இளம் விஞ்ஞானியாகத் தேர்வு.

வாழ்த்துகள் கார்மல் பள்ளி இளம் விஞ்ஞானிகளே!
🌹🌹

 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும்
இந்திய அறிவியல் தொழில்நுட்ப குழுமம் இணைந்து நடத்தும் 30- ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு,  நாகர்கோயில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் வைத்து நடைபெற்றது.
இதில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிகளை சார்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தனர். நாகர்கோயில் கார்மல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தலைமையாசிரியர் அருட்தந்தை மரிய பாஸ்டின் துரை சே.ச. அனுமதியுடன் ஆசிரியர் திரு. இஞ்ஞாசி ராஜா அவர்கள் வழிகாட்டலில் மாணவர்கள் அஸ்வின் லிபின், அஸான் ரோசிக் சைன் ஆகியோர்,  "நாகர்கோவில் பகுதிகளில் மறைக்கப்பட்ட பாரம்பரிய விளையாட்டுகளும் அதனை  மாணவர்களிடம் எடுத்துச் செல்லுதலும்" என்ற தலைப்பிலும்
ஆசிரியர் திரு.சந்தியாகு அவர்கள் வழிகாட்டலில் மாணவர்கள் பிரின்ஸ் நிகிலன், டேனிஷ் புருனோ ஆகியோர் " பள்ளி , மருத்துவமனை, வழிபாட்டுத்தலங்கள் முன்பு நடைபெறும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தும் முறை " என்ற  தலைப்பிலும், ஆசிரியர்  பிரிசிலிட்டி வழிகாட்டலில் மாணவர் விஷ்ணு  " நீர் சிக்கன முறையில் மூலிகைகள் மற்றும்  கீரைகள் வளர்ப்போம் பயனறிவோம்"  என்ற தலைப்பிலும் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர். இதில் பிரின்ஸ் நிகிலன் தலைமையில் தயாரித்த   "பள்ளி மருத்துவமனை வழிபாட்டு தலங்கள் முன்பு நடைபெறும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தும் முறை"  என்ற ஆய்வறிக்கை மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் கோவில்பட்டியில் டிசம்பர் 10,11 ஆகிய நாட்களில்  நடைபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களையும் காட்டி ஆசிரியர்களையும் பள்ளித் தாளாளர் , தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் அலுவலர் செயலாளர்  திரு. பபிலன் ஆசிரியர்கள் மாணவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து பாராட்டினர்.
🤝தமிழ் முரசு செய்தி. 

Friday, October 28, 2022

கார்மல் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா அறிவியல் கண்காட்சி. 28.10.2022

கார்மல் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா அறிவியல் கண்காட்சி
28.10.2022.
-----------------------
நாகர்கோவில் அக்.: 28
நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட ,ஆசிரியர் திரு. பினு மோன்  அனைவரையும் வரவேற்றார். அறிவியல் கண்காட்சியின் தொடக்க நிகழ்வாக குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கார்மல் பள்ளியின் தாளாளரும் இல்ல அதிபருமான  அருட்திரு.ஜெரோம் சே.ச அவர்கள் ஆசியுரை வழங்கினார்.

 கார்மல் பள்ளியின் மேனாள் உதவித் தலைமை ஆசிரியர் திரு. ஜெரோம் சேவியர் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடம், " அறிவியல் மனப்பான்மை உருவாக வேண்டும் , மாணவப் பருவத்திலேயே படைப்பாற்றல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்; விஞ்ஞானிகள் எல்லாம் சிறுவயதில் கேள்வி கேட்டு அறிவை  வளர்த்திருந்தனர். அது போல மாணவர்களும் கேள்வி கேட்டுப் பழக வேண்டும். அதுதான் அறிவின் தொடக்கம்.' என்று சிறப்புரையாற்றினார். பள்ளித்தலைமை ஆசிரியர் அருட்திரு மரிய பாஸ்டின் துரை சே.ச. அவர்கள் தலைமை உரையாற்றினார். உதவி தலைமை ஆசிரியர் அருட்திரு.ஜேசு  நேசம் சே.ச,  அவர்கள் அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தும்  முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.


கூடுதல் உதவித்தலைமையாசிரியர்கள் திரு.ஜெரோம், திரு.ஜாண் உபால்டு,திரு.அமல்ராஜ், ஆசிரியர் அலுவலர் செயலர் திரு.பபிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .கார்மல் அறிவியல் கழகத்தின் தலைவர் திரு.பாபு சைமன் ராஜ் நன்றி கூறினார் .ஆசிரியர் திரு. டைட்டஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் பின்பு மாணவர்களுடைய அறிவியல் படைப்பாற்றல் வெளிப்படுத்தக்கூடிய கண்காட்சியை திரு.ஜெரோம் சேவியர் அவர்கள் தொடக்கி வைத்தார்.

நாகர்கோவில் திருச்சிலுவைக்  கல்லூரியைச் சார்ந்த பேராசிரியர்கள் அருட் சகோதரி முனைவர்.செபாஸ்டின் அம்மாள் ,  முனைவர் லெஸ்லி பாத்திமா ,ஜெரோம் கல்லூரி பேராசிரியர் முனைவர் ரதி ஆகியோர் மாணவர்களின் அறிவியல் படைப்புகளை மதிப்பீடு செய்தனர். நிகழ்ச்சிக்கு கார்மல் பள்ளியில் செயல்படும் கார்மல் அறிவியல் கழக பொறுப்பு ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Friday, July 22, 2022

லசாக் இயக்க தொடக்க விழா 2022..

கார்மல் பள்ளியில் லசாக் இயக்க அறிமுக விழா
19.07.2022.
-------------------------
நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடம்  தலைமை பண்பு மற்றும் சமூக விழிப்புணர்வை உருவாக்கும் லசாக்(LASAC) இயக்கத்தின் தொடக்க விழா கார்மல் பள்ளியில் வைத்து நடைபெற்றது. பள்ளி தாளாளர் அருட்தந்தை முனைவர் அமலதாஸ் சே.ச. அவர்கள் அனுமதியுடன் தலைமையாசிரியர் அருட்தந்தை .மரிய பாஸ்டின் துரை சே.ச. அவர்களுடைய வழிகாட்டுதலின் பெயரில் கார்மல் பள்ளியில் லசாக் இயக்க தொடக்கவிழா நடைபெற்றது. லசாக் பொறுப்பாசிரியர் திரு.N.வெர்ஜின் அனைவரையும் வரவேற்றார். மாணவர்கள் தங்களை சுய அறிமுகம் செய்துகொண்டனர். லசாக் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரர் ஜான் புஷ்பராஜ் சே.ச. அவர்கள் லசாக் இயக்கம் பற்றியும் ஆளுமைத் திறன்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்கள் .
இணை ஒருங்கிணைப்பாளர் திரு ஆல்வின் சாம் நன்றி கூறினார்.


இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள்...அதற்கான அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் லசாக அமைப்புக்கு பாராட்டுகள்.

Friday, July 1, 2022

மனிதம் நெகிழ்ந்தது

*மனிதம் நெகிழ்ந்தது...*
--ஜே.ஆ.டோமினிக் ராஜ்

 பதிவு: நாள்:30.06.19, ஞாயிறு இரவு 11.00 மணி.
🌹

    சனிக்கிழமை இரவு நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  மாநில பொதுக்குழு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நண்பர் Sivasree Ramesh அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் ஏறி பயணிக்க....திருநெல்வேலியில் வந்ததும் அவரது முன் இருக்கையில் உள்ள நண்பர் அவசர அவசரமாக இறங்கிச் சென்றுள்ளார்...சிறிது நேரம் கழித்து பேருந்தில் ஏறிய அவர் தான் அமர்ந்திருந்த இருக்கையின் அடியில் எதையோ தேடினார்...
பேருந்து கிளம்பத் தொடங்கியதும் மீண்டும் திருநெல்வேலியில் இறங்கி விட்டார்.
....
திருச்சிக்கு பேருந்து அதிகாலை 4.00 மணிக்கு வந்து சேர..சிவஸ்ரீ 
பேருந்தில் இருந்து இறங்க எழும்போது சீட்டி்ல் ஒரு பர்ஸ் இருப்பதைப் பார்த்தார்.அருகில் இருந்த நண்பரிடம் அதைக் காட்டி இது யாருடையது ? என வினவ அவரும் அது தன்னது இல்லை என்று கூறி விட.. பரஸ் உள்ளே திறந்து பார்க்க உள்ளே ஆதார் அட்டை,,வாக்காளர் அடையாள அட்டை,PAN கார்டு , ஓட்டுநர் உரிமை அட்டை, மூன்று ATM கார்டுகள், ஐநூறு ரூபா நோட்டு,நூறு ருபா ,இருநூறு ரூபா நோட்டு இவற்றுடன் இரண்டு பென் டிரைவ்,ஒரு ஐந்து பவுன் தங்கச் சங்கிலி இருந்துள்ளன. இதைப் பார்த்ததும் இவருடைய தூக்கம் போய்விட்டது. இவ்வளவு ஆவணங்கள் இருந்தும்...அவருடைய தொடர்பு எண் ஏதுமில்லை என்பதுதான் வருத்தத்துக்குரியது.ஆதாரில் ஒரு முகவரியும், வாக்காளர் அடையாள அட்டையி்ல்,ஓட்டுநர் உரிமை 
அட்டையில் ஒரு முகவரியும் இருக்க...இவர் குழப்பத்தில் அதில் ஒரு சோதிடர் முகவரி இருக்க அதனைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.அவரும் அந்த பெயரில் தனக்கு யாரும் தெரியல என்று கூறிவிட என்னிடம் விசயத்தைப் பகிர்ந்து கொண்டார்.ஆதாரில் உள்ள முகவரிக்கு மாலை போய் பார்ப்போம் என்று கூறி தஞ்சையில் பொதுக்குழு முடிந்ததும் திருச்சி வந்து மதுரையை அடைய இரவு 8.00 மணி ஆனது...
    ஆதாரில் கூறியுள்ள முகவரிக்கு பேருந்தில் ஏறினோம்.த.விவேக்,
த/பெ. தங்கவேலுச்சாமி, G-o1 K
Block,  அனிருத் வசந்தரா அப்பார்ட்மென்ட், ஆண்டாள்புரம் என்ற முகவரியை தேடிப் பயணித்தோம்....
 அந்த எண் உள்ள வீட்டில் அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தோம்.

நண்பர் சிவஸ்ரீ ரமேஷ் சொல்லுவார்.. "பேசாம ஊருக்குப் போய் ஒரு கடிதம் போட்டு அவருக்குத் தெரிவித்து இருக்கலாம்" என்றார்.

நான் " இங்கு உள்ள காவலர்கள் யாருக்கும் இந்த பெயர் தெரியல... இந்த இடத்தில் உள்ள காய்கறி கடைக் காரரிடம் விவேக் தெரியுமா என்றால் தெரியாது என்கின்றனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருக்கும் இப்பகுதியில் தற்போது அவர் இருக்கின்றாரா? அல்லது வீட்டைக் காலிசெய்துவிட்டுப் போய்விட்டாரா ?
என்பதே தெரியல... கொஞ்சம் பொறுங்க பார்க்கலாம் " என்று கூறி காத்திருந்தோம். 

அந்த கதவில்
"Jesus Save Us" என்று ஒட்டப்பட்டுள்ளது.எனவே உள்ளே விவேக் இருக்க வாய்ப்பில்லை என்று நான் கூறும்போதே கதவைத் திறந்து ஒரு 40 வயது மதிக்கத்தக்கவர் வந்தார். 

"ஐயா உங்க பெயர் விவேக்கா?"  என்று கேட்டேன். 
"இல்லை சார்.நான் வேற. அப்படி யாரும் இங்கே இல்லை"  என்றார். "இல்லை ஐயா ...இதோ பாருங்க இந்த ஆதார் அட்டையில் இந்த முகவரி. தான் உள்ளது.
ஒருவேளை நீங்க இங்கு வரும் முன்பு யாரும் இருந்து இருக்கலாம்.யோசித்துப்பாருங்க என்று கூற...சாரி சார்.நாங்க வந்து சிக்ஸ் மந்த் தான் ஆகின்றது " என்றார்.

அவருக்கு எங்கள் மேல் ஐயப்பாடு இருந்திருக்கும் என்பதை உணர்ந்து சிவஸ்ரீ சார்...விவரத்தை கூறினார்.
"சார் இந்த பர்ஸ்சை அவரிடம் ஒப்படைக்கனும் . அதுதான் சார்.யோசித்துப் பாருங்க....என்று கூறினார்.
" ஐயா அவருடைய பெயரில் கடிதம் ஏதும் வந்து இருக்கலாம்...அப்படி ஏதாவது?... என்று கூற உடனே அவரும் , 

"ஆம் சார்..கடிதம் வரும்.
நான் அப்படியே  வெளியே வைத்து இருப்பேன்..." என்றார்.


"சார் தற்போது அப்படி வந்த கடிதம் உள்ளதா என்று பாருங்க.."என்று நான்  கூற வீட்னினுள் சென்று "இதோ ஒரு கடிதம் உள்ளது" என்றார்.Anna University Research Centre இலிருந்து வந்த கடிதத்தில் விவேக்குடைய அலைபேசி எண் இருந்தது. மகிழ்வுடன் அதில் தொடர்பு கொண்டதும் கொஞ்ச நேரம் பிஸி என்று வந்தது...
பின்பு தொடர் முயற்சிக்குப் பின்
" அலோ"
என்ற குரல்...
சார் நீங்க விவேக்கா?
என்றேன்.
"ஆம் சார்...நீங்க?"
"நான் டோமினிக்!....
உங்க ஆதார் அட்டை கிடைத்துள்ளது. ..."
என்று கூறவும்...
சார் உங்க கிட்டயா இருக்கு?
நீங்க எங்க சார் இருக்கீங்க?
ரெம்ப நன்றி சார்...எனக்கு ஒரே அழுகையா இருந்தது. நேற்று தூங்கவே இல்லை சார்...நீங்க எங்க சார் இருக்கீங்க?" என்று பட பட வென பேசினார்.

சார் நாங்க உங்க ஆதார் முகவரியில் உள்ள ஆண்டாள்புரம்
அனிருத் அப்பார்ட்மென்டில் உள்ளோம்" என்றேன்.

  சார் அங்கேயே இருங்க நான் சங்கரன்கோவிலில் இருந்து சென்னைக்கு டிராவல்ஸ்ல வந்துகொண்டு இருக்கின்றேன். அங்கே இறங்கி விடுகின்றேன் என்றார். சார்...நாங்க திருமங்கலம் வந்து விடுகின்றோம்.நீங்க வாங்க...
என்று கூறிவிட்டு ஆண்டாள்புரம் பேருந்து நிலையம் சென்று அங்குள்ள "வெண்மணி" சிற்றுண்டி மையத்தில் இரவு உணவை முடித்து திருமங்கல் பேருந்து நிலையத்தில் காத்திருந்தோம்.

இரவு 11.00 மணிக்கு வந்து சேர்ந்தார் விவேக்...
"சார் " என்று கூறி காலை தொட்டுக்கும்பிடப் பணிந்தவரைத் தடுத்தேன். 
   "சார் நான் எங்கே கிடைக்கப்போகின்றது என நினைத்தேன்? இந்தக் காலத்தில இது எல்லாம் நடக்கின்ற கதையா என என் நண்பர்கள் எல்லோரும் கூறினர்.திருநெல்வேலி யில் இறங்கியபோது என் கையில் ₹52 தான் இருந்தது. அதனை வைத்து சங்கரன் கோவில் சென்றடைந்தேன்.
மனசுக்கு கஷ்டமாக இருந்தது.. அழுகையாகவும் இருந்தது...
நீங்கள் போன் செய்ததும் தான் இப்போதும் உலகத்தில் மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர் என்று என் நண்பர்களோட பகிர்ந்துகொண்டேன்...ரெம்ப 
நன்றி சார்...அந்த பென்டிரைவ்ல என்னோட profile இருந்தது..."
என்று கூறினார்.
     அவர் ஒரு உதவிப்பேராசிரியராகப் பணி புரிவதாக கூறினார்.நாங்க இருவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கச் செயல்பாட்டாளர்கள் என்று எங்களை அறிமுகம் செய்துகொண்டோம்...
    இந்த மகிழ்வால் அவர் சென்னைக்கு நாளை செல்வதாக கூறி மீண்டும் சங்கரன் கோவில் செல்ல இருப்பதாக கூறினார்.
  "சார் ஒரு உதவி செய்யனும.?
ஒரு 30 ரூபா தரமுடியுமா?" 
என்றளன். 
என்னசார் நீங்க செய்த உதவிக்கு எவ்வளவு ரூபா கொடுத்தாலும் தகும்.என்ன உதவியும் செய்யத் தயாராக இருக்கின்றேன்" என்றார்.
      இல்லை சார் எங்களுக்கு ₹30 ம் உங்க முகவரியும் போதும்.நீங்களும் தமிழ்நாடு அறிவியல். இயக்க உறுப்பினராக சேர்ந்து அறிவியல் செய்பாட்டாளராக பயணிக்கனும் "
என்றோம்.
" நிச்சயமாக சார்!" என்று கண்ணில் மகிழ்ச்சி ஒளி பொங்க கூறினார்..ஒரு செல்பி எடுத்துக் கொண்டோம்.எங்கள்
நட்பு தொடர்ந்து பயணிக்கும்.

இரவு 3.00 மணிக்கு நாகர்கோவில் வந்தடைந்தது வரை நெடுநேரம் இந்த நினைவுகள் எங்களை தூங்காமல்  உரையாடிக்கொண்டு வரக்காரணமாயின...
நிம்மதி. 
காவல்துறையிடம் ஒப்படைத்திருந்தால் கூட அவருக்கு கிடைத்திருக்குமா? என்பது சந்தேகம் தான் சார்.நீங்க வந்ததால் இந்த முயற்சி வெற்றியாக முடிந்தது என்று சிவஸ்ரீ கூற " உண்மை கிடைக்கும் வரை தொடர்ந்து
தேடுவதுதானே அறிவியல்...
இதோ இது அறிவியலின் வெற்றி!"
என்றேன்.
சிறந்த வாழ்வியல் அனுபவம்.


--ஜே.ஆ.டோமினிக் ராஜ்
TNSF மாவட்டச்  செயலாளர்
குமரிமாவட்டம்

Saturday, June 18, 2022

கார்மல் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையவழியில் ICT பயிற்சி. 18.06.2022,சனிக்கிழமை.

தகவல் தொழில்நுட்பம் குறித்த குறுவள மைய பயிற்சி இணையவழியில் நடைபெற்றது.

 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பயிற்சி சில பயனுள்ள தகவல்களை தந்துள்ளது. EMIS செயலியில்  வருகைப் பதிவேடு பதிவு செய்வதில் உள்ள இடர்பாடுகள்...
 அவற்றை தீர்க்கும் வழிகள் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. இணையவழியில் பள்ளிக்கல்வித் துறையின் பல்வேறு செயல்பாடுகளை அறிந்து கொள்ளக்கூடிய வெப்சைட்டுகள் மற்றும் மொபைல் செயலிகள் குறித்து தெரிந்துகொள்ள உதவியாக இருந்தது. எதிர்காலத்தில் தகவல்தொழில்நுட்ப பயன்பாடுதான் கற்றல் கற்பித்தலில் மேலோங்கி இருக்கும், அதற்கான பயிற்சிகளை அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் பயிற்சிகள் நடைபெற்றது. 

வருகைப் பதிவு செய்வதிலும்,  தொடர்பு கொள்வதிலும் தொடக்கத்தில் பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும் அதன்பின் பயிற்சிகள் தெளிந்த நீரோட்டம் போல சென்று கொண்டிருந்தது. பல்வேறு பதிவேடுகள் பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இனிமேல் அவை  மின்பதிவேடுகளாக மாற்றம் செய்யப்படும் என்று செய்தி வரவேற்கத்தக்கது . அது போல மாற்றுச் சான்றிதழ் வழங்குவது, மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகளிலும் மாணவர்கள் பற்றிய ஒருங்கிணைந்த தகவல்களை பதிவு செய்வது குறித்த தகவல்களும் பயனுள்ளதாக இருந்தன.
பள்ளி செயல்பாடுளை இணையவழியில் பதிவு செய்வது... சிறப்புக் குழந்தைகள் பற்றிய செய்திகளை கூறி அவர்களை எவ்வாறு நாம் அடையாளம் கண்டுகொள்ள  வேண்டும் என்ற காணொளி... ஏற்கனவே அறிந்திருந்தாலும் தற்போது மீண்டும் அதனை கேட்டு அறியக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்தது. 

பல்வேறு புள்ளி விவரங்களை தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ள தரவுகள் மாநிலத்திற்கு மிகப்பெரிய உதவியாக அமைந்துள்ளது என்ற தகவலும் சிறப்பு.
 ஆசிரியர்கள் மனது வைத்தால் கல்வியில் மாற்றம் சாத்தியமே என்பதை பயிற்சி எடுத்துரைத்தது. இணையவழி கல்வி பயிற்சியில் பங்கேற்பவர்கள் கவனிக்கின்றனரா? என்று அறிந்துகொள்ள இயலாமையும் அதேபோல் பங்கேற்கும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்களுக்கான வாய்ப்பையும் பின்னூட்ட படிவம் அனுப்பும் முறைகளையும் முன்னமே கூறாதது ஒரு குறைபாடு. இதே போல தேநீர் இடைவேளை மதிய உணவு இடைவேளை போன்றவை குறிப்பிட்ட கால அளவிற்கு குறைவாக இருந்துள்ளது.  முதல் முறையாக ஆசிரியர்களை இருக்கையில் ஒரே இடத்தில் அமர வைத்து நடத்தியது சோர்வை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து பல்வேறு மீம்ஸ்கள் புலன குழுக்களில் வந்து நகைச்சுவை ஊட்டியது படைப்பாற்றலின் மற்றொரு பரிணாமமாக பார்த்தேன் .
எங்கள் பள்ளியில் பயிற்சி மேறபார்வையாளராக கலந்துகொண்ட பயிற்றுநர் திருமதி.விஜி அவர்களுக்கு புத்தகம் பரிசளித்து நன்றி கூறினோம்.

🙏🏽

Wednesday, June 15, 2022

கார்மல் பள்ளியில் உலக காற்று தின கருத்தரங்கம். 15.ஜுன்.2022

கார்மல் பள்ளியில் உலக காற்று தினம். 
                                                                                                                                                                            நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை அமைப்பு,சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து உலக காற்று தினம் குறித்த கருத்தரங்கை நடத்தியது. பள்ளி தாளாளர் அருட்தந்தை. அமலதாஸ் சேவியர் சே. ச. மற்றும் பள்ளி தலைமையாசிரியர் அருள்தந்தை பாஸ்டின் சே. ச. ஆகியோர் வழிகாட்டலின் படி உலக காற்று தினம் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் திரு. டோமினிக் ராஜ் அனைவரையும் வரவேற்றார் . தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நாகர்கோவில் ஒன்றிய கவுரவ தலைவர் திரு. ஆண்டனி பால் அவர்கள் தொடக்க உரையாற்றினார். கார்மல் பள்ளி பசுமைப்படை இயக்க பொறுப்பாசிரியர் திரு.ஜெரோம் கோபிநாத் பசுமை படை அமைப்பு குறித்து எடுத்துரைத்தார். கன்னியாகுமரி மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்   திருமதி. மலர்விழி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 


அவர் தமது உரையில், நமது வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் பயன்படும் உன்னதம் வாய்ந்த ஒன்று, காற்று. அத்தகைய காற்றிற்கு பெருமை சேர்க்கும் வகையில் உலக காற்று தினம் கொண்டாடப்படுகிறது.
காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் ஜூன் 15 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையம் மற்றும் உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் இணைந்து உருவாக்கிய இந்நாள், காற்றின் ஆற்றலைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் காற்றின் முக்கியத்துவம் குறித்து நமக்கு உணர்த்துகிறது.
                                                                                                                                                                                           மனித நாகரீகம் வளர வளர இயற்கையானது சீர்கேடு அடைந்து வருகிறது. உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்று. எனினும், சில நேரங்களில் இந்த காற்று தனி உருவெடுத்து தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. அதிதீவிர காற்று புயலாக மாறினால் ஆபத்து ஆதிக்கம் செய்யும் என்பதும் உண்மை.
                                                                                                                                                                              சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை அமைச்சகம் சார்பில் 2014 இல் காற்று தரக் குறியீட்டு எண் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் தமது சுற்றுப்புறக் காற்றின் தரத்தினை எளிதில் அறியும் வண்ணம் ‘ஒரே எண் – ஒரே நிறம் – ஒரே விளக்கம்’ என வரையறுக்கப்பட்டது.
                                                                                                                                                                                                                                                                                                                                                                                         2012 இல் உலகின் 132 நாடுகளில் மிகக் குறைந்த காற்றுத் தரம் கொண்ட நாடாக இந்தியா மதிப்பிடப்பட்டுள்ளது.
                                                                                                                                                                                                 உலக அளவில் காற்று மாசுபட்டுள்ள நகரங்களில் புதுடெல்லி முதலிடத்தில் உள்ளது.
காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது தமிழ்நாடு. இதனைக் கருத்தில் கொண்டு வருடம் முழுவதும் மற்றவர்களுக்கு உபதேசிக்கும் அனைத்தையும், அவர் அவர் கடைபிடித்தால் மட்டுமே எதிர் வரும் சமுதாயம் நல்ல காற்றினை சுவாசிக்க முடியும் என்பதை நாம் மனதில் கொண்டு இனி வரும் நாட்களில் காற்றை மாசுபடுத்த மாட்டோம் என உறுதியேற்போம்.
                                                                                                                                                                        ஒவ்வொருவரும் தங்களது வாகனங்களை புகை இல்லாமல் நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டும். தொழிற்சாலைகளில் காற்று மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும்.
நல்ல காற்றை நாம் மட்டும் சுவாசித்தால் போதாது, நமது அடுத்தத் தலைமுறைக்கும் விட்டுச்செல்ல ஒவ்வொரு தனிமனிதனும் உறுதி கொள்ள வேண்டும். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தேசிய பசுமைப்படை அமைப்பு மாநிலம் முழுவதும் பள்ளிகளில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினம், ஜூன் 15  இல் உலக காற்று தினம் , ஜூன் 17 இல் பாலைவனமாதல் தடுப்பு தினம் ஆகியவற்றை கொண்டாட அறிவுறுத்தியுள்ளது. இதற்காக பல்வேறு போட்டிகளை நடத்தி விழிப்புணர்வுகளை உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே நம் மாவட்டம் பசுமையான மாவட்டமாக செயல்படவும் நம் பள்ளி வளாகம் தூய்மையான வளாகமாக அமையவும் நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்வோம்' என்று கூறினார்.

 மாணவர்கள் மரங்களை கட்டியணைத்துக் கொண்டு மரங்களை பாதுகாப்போம் என்று உறுதி எடுத்துக்கொண்டனர். மாணவர்கள் மனிதச் சங்கிலி அமைத்து காற்று மாசு படாமல் பாதுகாப்போம் என்று முழக்கமிட்டனர். நிறைவாக மாணவர் ஜெரால்டு நன்றி கூறினார்.

Wednesday, March 23, 2022

மாணவர் சுதீஷ் ஐ கண்டு பிடித்த மகிழ்ச்சி

சுதீஷ் என் வகுப்பு மாணவர்....
இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவனது இல்லம் தேடிச் சென்றபோது நடந்த நிகழ்வு. பாழடைந்த வீடு...
குடிக்கு அடிமையான தந்தையால் அந்த இடத்தில் இருந்து புலம் பெயர்ந்து சென்று விட்டதாக தகவல் வர..
அவனது சோக கதையை அருகில் இருந்த பாட்டி கூற..்்
அதனை கேட்டுக்கொண்டு...அவனுக்கான பாடநூலை அவரிடம் ஒப்படைத்து
சுதீஷ் தயாரிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறி வந்தேன்.
டிசம்பரில் பள்ளி 
திறந்த போது  இவன் வரவில்லை.

அவரது வீட்டில் உள்ளே சென்று
 பார்த்தேன் ஆடு மாடுகள் தங்கும் இடம் கூட அழகுற அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் இதில்தான் இந்த குழந்தை தங்கிக்கொண்டு இவ்வளவு நாளும் பள்ளிக்கு வந்துள்ளதா ? என்று நினைக்கும் போது வருத்தமாக இருந்தது. பாம்புகள் நிறைந்த இடம் .....
எவ்வித பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லாத இடம் .....
எப்போது இடிந்து விடும் நிலையில் இருக்கக்கூடிய இடம். 
இதுபோன்ற சூழ்நிலை தான் அவன் மனநிலைகளையும் பிரதிபலித்துள்ளதை  நான் வகுப்பறையில் கண்டுள்ளேன். அப்போதெல்லாம் அவன் மீது கோபம் வரும் . வீட்டை வந்து பார்த்தவுடன் தான் அவனது மனநிலைக்காண காரணம் புரிந்தது

EMIS இல் உள்ள தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டபோது அந்த எண் தற்போது பயன்பாட்டில் இல்லை என்றே தகவல் வந்தது. பிப்ரவரி மாதமும் பள்ளிக்கு வரவில்ல....மார்ச் மாதமும் பள்ளிக்கு வரவில்லை....ஆனாலும் சுதீஷைக் குறித்த தேடல் நடைபெற்றுக் கொண்டே வந்தது.

இன்று அதற்கு தீர்வு கிடைத்தது.
அதுதான் இப்பதிவு.                                 .------------------                  இன்று மாலை மலையடிவார பாதையில் பயணம் செய்யும்போது சுதீஷ் அவனுடைய அம்மாவுடன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். சதீஷ் என்று அழைத்தவுடன் ...ஐயா என்று அதே ட்ரேடு மார்க் சிரிப்போடு வந்தான் . ஏண்டா பள்ளிக்கு வரல ?என்று கேட்டபோது அய்யா புத்தகம் இல்லை என்றான். உன் பக்கத்து வீட்டு பாட்டியிடம் புத்தகம் கொடுத்து சென்றேனே அவர்கள் கொடுக்கலையா? என்று கேட்டேன். இல்லை ஐயா ....என்றான்.
புத்தகம் இருந்தால் பள்ளிக்கு வருவாயா? என்று கேட்டவுடன் தலையை ஆட்டினான். அவர்கள் அம்மாவிடம் கூறிக் கொண்டு அவனை பைக்கில் ஏற்றிக் அவனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று அருகிலுள்ள பாட்டியிடம் விசாரித்தபோது அவர் வெளியே சென்று இருப்பதாக கூறினர். 
சுதீஷ் வீடு கொஞ்சம் சரி செய்யப்பட்டு இருந்தது .அவனது அக்கா வீட்டில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தார். 
இவ்வளவு நாள் எங்கே இருந்தாய்? என்று கேட்டபோது அருகில் உள்ள ஒரு பாட்டி கூறினார் அவன் கிரஷர் வண்டியை கழுவும்  வேலைக்குச் சென்றுள்ளான். அதனால்தான் அவன் பள்ளிக்கு வரவில்லை என்று கூறினார். "பிள்ளைகளின் வருமானம் பெற்றோருக்கு அவமானம்" என்பதுபோல பிள்ளைகள் வேலைக்குச் செல்வது எம்போன்ற ஆசிரியருக்கும் அவமானம்...
நீ நாளைக்கு கட்டாயம் பள்ளிக்கு வரணும் சரியா? 
புத்தகம், நோட்டு, சீருடை எதைப்பற்றியும் கவலைப்படாதே...உனக்காக நான் வகுப்பறையில் காத்திருப்பேன்...என்று கூறினேன். தலையாட்டினான். 
இது என்னடா காதில் கம்மல் போட்டிருக்கிற ?  புதுசா இருக்குதே...என்றேன்.
சார் வேலை பார்க்கிற இடத்தில் ஒரு அண்ணன் போட்டு விட்டார்கள் என்றான். கமலை கழட்டு என்றேன். 
காதில் புண்ணு இருக்குது ..... என்றான். 

பரவாயில்லை நானே கழட்டுறேன்  என்று கூறியவுடன் அவனே கழற்றினான். கமலை வாங்கி பாறையில்  வீசினேன். 

"இது என்னடா கால்கட்டு ?"என்றேன்.காலில் ஒரு கருப்பு கயிறு கட்டி இருந்தார் .
சும்மா தான் சார் என்றான். 
ஏதாவது சாமி கட்டுச்சா? என்றேன் .
இல்ல சார் என்றான். எந்த கட்டுகளுக்குள்ளும் நீ அடங்கி இருக்க கூடாது ...
தாயி ஒரு கத்தி இருந்தால் எடுத்துட்டு வா...
என்ற உடன் அவனது அக்கா வீட்டின் உள்ளே சென்று ஒரு கத்தி எடுத்து வந்தார்.காலில் கட்டிய கயிற்றை அறுத்துவிட்டேன். சுதீஷ் விடுதலை பெற்றான். நாளைக்கு பள்ளிக்கு வரனும். இந்த வாரம் தலைமுடியை வெட்டனும்...
நீ பத்தாம் வகுப்பு வரை படித்தால் அதன் பின் உன்னை தொழில் பயிற்சி பள்ளியில் சேர்த்து விடுகின்றேன். ஒரு தொழிலை கற்றுக் கொள் அதன் பின்பு சான்றிதழுடன் சம்பாதிக்க தொடங்கு என்று கூறினேன் தலையை ஆட்டினான். இந்த தலையாட்டு சிங்கத்தின் தலையாட்டா? இல்லை பூம்பூம் காளையின் தலையாட்டா  என்பது நாளை காலை தான் தெரியும். காத்திருக்கின்றேன் சதீஷ் வரும் வருகையை நோக்கி..... 

பல குழந்தைகள் வேலைக்கு செல்வதற்கு தந்தையின் குடி அல்லது உடைபட்ட குடும்பச்சூழல் மிகப்பெரிய காரணமாக இருக்கின்றது என்பது எதார்த்த உண்மை. 
அரசும் ....பள்ளிக்கல்வித்துறையும், குழந்தைகள் நல அமைப்பும்  இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கான உளவியல்ரீதியான ஆற்றுப்படுத்துதல் உடனடியாக தொடங்க வேண்டும். 

---ஜே.ஆ.டோமினிக் ராஜ். 
குளச்சல். 
23.03.22.