Wednesday, June 15, 2022

கார்மல் பள்ளியில் உலக காற்று தின கருத்தரங்கம். 15.ஜுன்.2022

கார்மல் பள்ளியில் உலக காற்று தினம். 
                                                                                                                                                                            நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை அமைப்பு,சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து உலக காற்று தினம் குறித்த கருத்தரங்கை நடத்தியது. பள்ளி தாளாளர் அருட்தந்தை. அமலதாஸ் சேவியர் சே. ச. மற்றும் பள்ளி தலைமையாசிரியர் அருள்தந்தை பாஸ்டின் சே. ச. ஆகியோர் வழிகாட்டலின் படி உலக காற்று தினம் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் திரு. டோமினிக் ராஜ் அனைவரையும் வரவேற்றார் . தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நாகர்கோவில் ஒன்றிய கவுரவ தலைவர் திரு. ஆண்டனி பால் அவர்கள் தொடக்க உரையாற்றினார். கார்மல் பள்ளி பசுமைப்படை இயக்க பொறுப்பாசிரியர் திரு.ஜெரோம் கோபிநாத் பசுமை படை அமைப்பு குறித்து எடுத்துரைத்தார். கன்னியாகுமரி மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்   திருமதி. மலர்விழி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 


அவர் தமது உரையில், நமது வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் பயன்படும் உன்னதம் வாய்ந்த ஒன்று, காற்று. அத்தகைய காற்றிற்கு பெருமை சேர்க்கும் வகையில் உலக காற்று தினம் கொண்டாடப்படுகிறது.
காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் ஜூன் 15 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையம் மற்றும் உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் இணைந்து உருவாக்கிய இந்நாள், காற்றின் ஆற்றலைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் காற்றின் முக்கியத்துவம் குறித்து நமக்கு உணர்த்துகிறது.
                                                                                                                                                                                           மனித நாகரீகம் வளர வளர இயற்கையானது சீர்கேடு அடைந்து வருகிறது. உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்று. எனினும், சில நேரங்களில் இந்த காற்று தனி உருவெடுத்து தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. அதிதீவிர காற்று புயலாக மாறினால் ஆபத்து ஆதிக்கம் செய்யும் என்பதும் உண்மை.
                                                                                                                                                                              சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை அமைச்சகம் சார்பில் 2014 இல் காற்று தரக் குறியீட்டு எண் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் தமது சுற்றுப்புறக் காற்றின் தரத்தினை எளிதில் அறியும் வண்ணம் ‘ஒரே எண் – ஒரே நிறம் – ஒரே விளக்கம்’ என வரையறுக்கப்பட்டது.
                                                                                                                                                                                                                                                                                                                                                                                         2012 இல் உலகின் 132 நாடுகளில் மிகக் குறைந்த காற்றுத் தரம் கொண்ட நாடாக இந்தியா மதிப்பிடப்பட்டுள்ளது.
                                                                                                                                                                                                 உலக அளவில் காற்று மாசுபட்டுள்ள நகரங்களில் புதுடெல்லி முதலிடத்தில் உள்ளது.
காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது தமிழ்நாடு. இதனைக் கருத்தில் கொண்டு வருடம் முழுவதும் மற்றவர்களுக்கு உபதேசிக்கும் அனைத்தையும், அவர் அவர் கடைபிடித்தால் மட்டுமே எதிர் வரும் சமுதாயம் நல்ல காற்றினை சுவாசிக்க முடியும் என்பதை நாம் மனதில் கொண்டு இனி வரும் நாட்களில் காற்றை மாசுபடுத்த மாட்டோம் என உறுதியேற்போம்.
                                                                                                                                                                        ஒவ்வொருவரும் தங்களது வாகனங்களை புகை இல்லாமல் நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டும். தொழிற்சாலைகளில் காற்று மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும்.
நல்ல காற்றை நாம் மட்டும் சுவாசித்தால் போதாது, நமது அடுத்தத் தலைமுறைக்கும் விட்டுச்செல்ல ஒவ்வொரு தனிமனிதனும் உறுதி கொள்ள வேண்டும். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தேசிய பசுமைப்படை அமைப்பு மாநிலம் முழுவதும் பள்ளிகளில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினம், ஜூன் 15  இல் உலக காற்று தினம் , ஜூன் 17 இல் பாலைவனமாதல் தடுப்பு தினம் ஆகியவற்றை கொண்டாட அறிவுறுத்தியுள்ளது. இதற்காக பல்வேறு போட்டிகளை நடத்தி விழிப்புணர்வுகளை உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே நம் மாவட்டம் பசுமையான மாவட்டமாக செயல்படவும் நம் பள்ளி வளாகம் தூய்மையான வளாகமாக அமையவும் நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்வோம்' என்று கூறினார்.

 மாணவர்கள் மரங்களை கட்டியணைத்துக் கொண்டு மரங்களை பாதுகாப்போம் என்று உறுதி எடுத்துக்கொண்டனர். மாணவர்கள் மனிதச் சங்கிலி அமைத்து காற்று மாசு படாமல் பாதுகாப்போம் என்று முழக்கமிட்டனர். நிறைவாக மாணவர் ஜெரால்டு நன்றி கூறினார்.

No comments:

Post a Comment