Wednesday, March 23, 2022

மாணவர் சுதீஷ் ஐ கண்டு பிடித்த மகிழ்ச்சி

சுதீஷ் என் வகுப்பு மாணவர்....
இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவனது இல்லம் தேடிச் சென்றபோது நடந்த நிகழ்வு. பாழடைந்த வீடு...
குடிக்கு அடிமையான தந்தையால் அந்த இடத்தில் இருந்து புலம் பெயர்ந்து சென்று விட்டதாக தகவல் வர..
அவனது சோக கதையை அருகில் இருந்த பாட்டி கூற..்்
அதனை கேட்டுக்கொண்டு...அவனுக்கான பாடநூலை அவரிடம் ஒப்படைத்து
சுதீஷ் தயாரிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறி வந்தேன்.
டிசம்பரில் பள்ளி 
திறந்த போது  இவன் வரவில்லை.

அவரது வீட்டில் உள்ளே சென்று
 பார்த்தேன் ஆடு மாடுகள் தங்கும் இடம் கூட அழகுற அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் இதில்தான் இந்த குழந்தை தங்கிக்கொண்டு இவ்வளவு நாளும் பள்ளிக்கு வந்துள்ளதா ? என்று நினைக்கும் போது வருத்தமாக இருந்தது. பாம்புகள் நிறைந்த இடம் .....
எவ்வித பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லாத இடம் .....
எப்போது இடிந்து விடும் நிலையில் இருக்கக்கூடிய இடம். 
இதுபோன்ற சூழ்நிலை தான் அவன் மனநிலைகளையும் பிரதிபலித்துள்ளதை  நான் வகுப்பறையில் கண்டுள்ளேன். அப்போதெல்லாம் அவன் மீது கோபம் வரும் . வீட்டை வந்து பார்த்தவுடன் தான் அவனது மனநிலைக்காண காரணம் புரிந்தது

EMIS இல் உள்ள தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டபோது அந்த எண் தற்போது பயன்பாட்டில் இல்லை என்றே தகவல் வந்தது. பிப்ரவரி மாதமும் பள்ளிக்கு வரவில்ல....மார்ச் மாதமும் பள்ளிக்கு வரவில்லை....ஆனாலும் சுதீஷைக் குறித்த தேடல் நடைபெற்றுக் கொண்டே வந்தது.

இன்று அதற்கு தீர்வு கிடைத்தது.
அதுதான் இப்பதிவு.                                 .------------------                  இன்று மாலை மலையடிவார பாதையில் பயணம் செய்யும்போது சுதீஷ் அவனுடைய அம்மாவுடன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். சதீஷ் என்று அழைத்தவுடன் ...ஐயா என்று அதே ட்ரேடு மார்க் சிரிப்போடு வந்தான் . ஏண்டா பள்ளிக்கு வரல ?என்று கேட்டபோது அய்யா புத்தகம் இல்லை என்றான். உன் பக்கத்து வீட்டு பாட்டியிடம் புத்தகம் கொடுத்து சென்றேனே அவர்கள் கொடுக்கலையா? என்று கேட்டேன். இல்லை ஐயா ....என்றான்.
புத்தகம் இருந்தால் பள்ளிக்கு வருவாயா? என்று கேட்டவுடன் தலையை ஆட்டினான். அவர்கள் அம்மாவிடம் கூறிக் கொண்டு அவனை பைக்கில் ஏற்றிக் அவனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று அருகிலுள்ள பாட்டியிடம் விசாரித்தபோது அவர் வெளியே சென்று இருப்பதாக கூறினர். 
சுதீஷ் வீடு கொஞ்சம் சரி செய்யப்பட்டு இருந்தது .அவனது அக்கா வீட்டில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தார். 
இவ்வளவு நாள் எங்கே இருந்தாய்? என்று கேட்டபோது அருகில் உள்ள ஒரு பாட்டி கூறினார் அவன் கிரஷர் வண்டியை கழுவும்  வேலைக்குச் சென்றுள்ளான். அதனால்தான் அவன் பள்ளிக்கு வரவில்லை என்று கூறினார். "பிள்ளைகளின் வருமானம் பெற்றோருக்கு அவமானம்" என்பதுபோல பிள்ளைகள் வேலைக்குச் செல்வது எம்போன்ற ஆசிரியருக்கும் அவமானம்...
நீ நாளைக்கு கட்டாயம் பள்ளிக்கு வரணும் சரியா? 
புத்தகம், நோட்டு, சீருடை எதைப்பற்றியும் கவலைப்படாதே...உனக்காக நான் வகுப்பறையில் காத்திருப்பேன்...என்று கூறினேன். தலையாட்டினான். 
இது என்னடா காதில் கம்மல் போட்டிருக்கிற ?  புதுசா இருக்குதே...என்றேன்.
சார் வேலை பார்க்கிற இடத்தில் ஒரு அண்ணன் போட்டு விட்டார்கள் என்றான். கமலை கழட்டு என்றேன். 
காதில் புண்ணு இருக்குது ..... என்றான். 

பரவாயில்லை நானே கழட்டுறேன்  என்று கூறியவுடன் அவனே கழற்றினான். கமலை வாங்கி பாறையில்  வீசினேன். 

"இது என்னடா கால்கட்டு ?"என்றேன்.காலில் ஒரு கருப்பு கயிறு கட்டி இருந்தார் .
சும்மா தான் சார் என்றான். 
ஏதாவது சாமி கட்டுச்சா? என்றேன் .
இல்ல சார் என்றான். எந்த கட்டுகளுக்குள்ளும் நீ அடங்கி இருக்க கூடாது ...
தாயி ஒரு கத்தி இருந்தால் எடுத்துட்டு வா...
என்ற உடன் அவனது அக்கா வீட்டின் உள்ளே சென்று ஒரு கத்தி எடுத்து வந்தார்.காலில் கட்டிய கயிற்றை அறுத்துவிட்டேன். சுதீஷ் விடுதலை பெற்றான். நாளைக்கு பள்ளிக்கு வரனும். இந்த வாரம் தலைமுடியை வெட்டனும்...
நீ பத்தாம் வகுப்பு வரை படித்தால் அதன் பின் உன்னை தொழில் பயிற்சி பள்ளியில் சேர்த்து விடுகின்றேன். ஒரு தொழிலை கற்றுக் கொள் அதன் பின்பு சான்றிதழுடன் சம்பாதிக்க தொடங்கு என்று கூறினேன் தலையை ஆட்டினான். இந்த தலையாட்டு சிங்கத்தின் தலையாட்டா? இல்லை பூம்பூம் காளையின் தலையாட்டா  என்பது நாளை காலை தான் தெரியும். காத்திருக்கின்றேன் சதீஷ் வரும் வருகையை நோக்கி..... 

பல குழந்தைகள் வேலைக்கு செல்வதற்கு தந்தையின் குடி அல்லது உடைபட்ட குடும்பச்சூழல் மிகப்பெரிய காரணமாக இருக்கின்றது என்பது எதார்த்த உண்மை. 
அரசும் ....பள்ளிக்கல்வித்துறையும், குழந்தைகள் நல அமைப்பும்  இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கான உளவியல்ரீதியான ஆற்றுப்படுத்துதல் உடனடியாக தொடங்க வேண்டும். 

---ஜே.ஆ.டோமினிக் ராஜ். 
குளச்சல். 
23.03.22.