Saturday, April 27, 2024

டோனியின் சோகத்தை தீர்த்து வைப்பது எப்படி?

கொரோனா கால கொடுமை


அவன் புதிதாக பள்ளியில் 9 ஆம் வகுப்பில் சேர்ந்திருந்தான்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பிப்ரவரியில் பள்ளி திறக்கப்பட்டபோது
முதல் வரிசையில் அமர்ந்திருந்தான்.


முதல் வகுப்பு என்பதால் 
அனைத்து மாணவர்களையும் சுய அறிமுகம் செய்து கொள்ள வேண்டினேன்.

இவன் முறை வரும்போது 
தன் பெயரை அறிமுகம் செய்துவிட்டு
தந்தை பற்றி கூறும் போது கொஞ்சம் தடுமாறினான்.

நான் கொஞ்சம்  கால அவகாசம் எடுத்துக்கொண்டு பேச கூறினேன்.

அவர் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தன.

ஏதே சிக்கல் உள்ளது என்பதை 
உணர்ந்து கொண்டு

வகுப்பு முடிந்ததும் அவனோடு வளாகத்தில் நடந்து கொண்டே அவன் அப்பாவைப் பற்றி 
கேட்டேன்.

"சார் எங்க அப்பா
பாம்பு கடிச்சு இறந்து போயிட்டாங்க சார்" என்றான்.

எப்போது டா? என்றேன்.

"கடந்த ஜூன் மாதம் சார்." என்றான்.

எப்படிடா? என்று கேட்க

சார் இரவு 12 மணிக்கு வீட்டு தின்னையில் தூங்கிய போது பாம்பு கடித்துவிட்டது.

"உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் காப்பாத்தி இருக்கலாமே?"என்று நான் கூற..

" சார்...ஆட்டோ பிடிச்சு ஆஸ்பத்திரி கொண்டு போனோம்.
கொரோனா டயம் என்பதால் உடனே பார்க்கல...
கொஞ்ச நேரம் அலைக்கழித்தாங்க...
அப்புறம் உள்ளே அனுமதித்தாங்க...
நர்சு தான் சார் வந்து கவனிச்சாங்க.
ஊசி போட்டதும் தூங்க கூடாதாம்.
எங்க அப்பா தூங்கி விட்டதாம்.
அதனால் காலையில் அவர் இறந்துவிட்டாரு சார்"
என்று கண்களில் நீர் வழிய கூறினான்.

இந்த பள்ளி பிடித்திருக்கா?
விடுதி பிடிச்சு இருக்கா?
என்று விசாரித்தேன்.

"ம்...அப்பா இல்லல்லா சார்.
அதனால் ஒரு சாரிடம் கேட்டு அம்மா இங்கே வந்து சேர்த்து விட்டாங்க"
என்றான் வெள்ளந்தியாக...
நன்றாக படிக்கும் மாணவன்.

வருவாய் ஈட்டும் தாய் தந்தை யாராவது இறந்துவிட்டால் அரசு ₹75 ஆயிரம் உதவி செய்யும்.அதற்கு விண்ணப்பித்துள்ளாயா?
என கேட்டேன். அது தெரியாது சார்.
என்றான்.
சரி அம்மாவிடம் கேட்டுக் கூறு என்றேன்.
அதற்குள் பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டதும் ஊருக்குச் சென்றுவிட்டான்.

அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினான்.
அப்பாவின் இறப்புச் சான்று, வாரிசு சான்று,முதல் தகவல் அறிக்கை, உடற்கூராய்வு சான்று,ஆகியவற்றின் நகலை அனுப்பி வைத்தான்.

தற்போது பயிற்சி ஏடு வாங்க வந்திருந்தான்.
 
"சார் அந்த விண்ணப்பத்தை அனுப்பிச்சாச்சா சார்?" என கேட்க..
அலுவலகத்தில் பாம்பு கடித்தால் அந்த உதவியை பெற முடியாதாம் என்று கூற...
வேணா நீங்க கலைக்டர் ஆபீஸ்ல விசாரியுங்க சார் என்று கூறினர்.

அவனை அழைத்துக்கொண்டு ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றேன்.

சார் அது சமூக நலத்துறை சார்ந்ததாக இருக்கலாம் நீங்க அங்கே புதிய கட்டடத்தில் போய் விசாரியுங்கள் என்றனர்.
அங்கே சென்றபோது இது எங்களுக்குக் கீழ் வராது...
மூனாவது மாடியில் குழந்தைகள் நலத்துறை இருக்கு அங்கு கேளுங்க என்றனர்.

மூனாவது மாடிக்கு சென்று..
அங்கே விசாரித்தால் ஒரு பெண்மணி...மனுவை வங்கிப் பார்த்துவிட்டு..
"சார் இது எஜூகேசன் டிப்பார்ட் மெண்ட் விசயம்.நீங்க அங்கே போய் விசாரியுங்க" என்று கூற...
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு சென்றேன்.

"சார் அந்த செக்சன் வரவில்லையே?"
என்ற பதில் வர..
அலுவலக முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி விவரத்தைக் கூறினேன்.

சார் சாலை விபத்து மரணங்களுக்கு மட்டும் தான் அளித்து வருகின்றோம் என்றார்.
நானும்...
"சார் பாம்புகடியும் ஓரு விபத்துதான் சார்.
அதற்கான சான்று எல்லாம் உள்ளது சார்" என்றேன்.

சரி அப்போ ஒன்னு செய்யுங்க...
தாசில்தாரிடம் சென்று
"பாம்பு கடி விபத்தினால் மரணமடைந்தார்"
என்று ஒரு சான்று வாங்கி வாருங்க அனுப்பி விடலாம் என்று கூறினார்.
அந்த மாணவரிடம் கூற..
"சரிங்க சார்"
என்று கூறி பேருந்தில் ஏறிச் சென்றான்.
ஒரு உதவிக்காக எத்தனை கதவுகளை தட்ட வேண்டி உள்ளது.
தட்டிக்களிக்க ஏராளமான காரணம் சொல்லும் சமூகம் பெற்றுத்தர உருப்படியா ஒரு காரணத்தைக் கூற முடியாதது வேதனையே.

Friday, February 23, 2024

காந்தி சார் நினைவுகள் 1

காந்தி சார் நினைவுகள்...1
______________________
23.02.24.
கொடைக்கானல் செண்பகனூர்
தோட்டத்தில் அவரது தந்தையின் தந்தை (தாத்தா)பணி செய்ததால் அருட்தந்தையரின் போதனைகளை கேட்டு..
கிறிஸ்தவ மதத்தை தழுவுகின்றார்.
அதனால் அவர் தந்தைக்கு
சாந்தப்ப தேவர்
பெயர் இடப்படுகிறது.
அவரது சகோதரர்கள் சகோதரிகள் அனைவரும் கிறிஸ்தவ பெயரே.மூன்றாம் 
தலைமுறையான
இவரது குழந்தைகளுக்கு மாப்பிள்ளை 
தேடும்போது..
கிறிஸ்தவ மாப்பிளை கிடைக்கவில்லை.
எனவே கிறிஸ்தவ பெயர் தாங்கிய இரு குழந்தைகளையும்
இந்து சமய கடங்கில் திருமணம் செய்து கொடுக்க வேண்டிய நிலை.
இரு மருமகன்களும் மகன்கள் போலவே அவரது குடும்பத்தை கவனித்துக் கொள்கின்றனர்.
இளைய மகன் சார் இங்கே பணியாற்றும் போது உடல் நல குறைவு காரணமாக காலம் ஆகிவிட்டார்.
அவரது அடக்கத்திற்கும் நாம் சென்று வந்தோம்.
மூத்த மகன் தயா
ஒரு மாற்றுத்திறனாளி.
அவருக்காக வீட்டில் ஒரு கடை வைத்து கொடுத்து அதனை கவனித்து வந்தார் ‌.
அவருக்கு கிறிஸ்தவ மதத்தில் தான் எடுக்க வேண்டும் என்பதற்காக நாகர்கோவிலில் ஒரு பெண் பார்த்து கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் செய்து வைத்ததார்.
2001 இல் நடைபெற்ற அந்த திருமணத்திற்கும் நம் பள்ளி ஆசிரியர்கள் அலுவலர்கள் சென்று வந்தோம்.
கடந்த ஏழு  ஆண்டுகளுக்கு முன்பு மகனும் உடல் நல குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.
பணி நிறைவு பெற்றவுடன் தேனியில் உள்ள ஆலயத்தில் காலையில் இன்று ஹார்மோனியம் இசை அங்குள்ள குழந்தைகளுக்கும் இசையை கற்றுக் கொடுப்பதில் நேரத்தை செலவு செய்து வந்தவர்.

தந்தை வில்லியம் அல்போன்ஸ் சே.ச. அவர்கள் இருக்கும்போது ஆசிரியர் அவர்களது வீட்டிற்கு சென்று ஜெபிப்பது வழக்கம்.

மகன் பிறந்த பின்பு அவருக்கு உடல் நலத்தில் குறைவு ஏற்பட
அதிகம் பயணம் செய்ய இயலாமல் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது.
ஒரு டைரியில் அனைத்து நண்பர்களுடைய அலைபேசி எண்களையும் எழுதி வைத்து நினைவு வரும் போதெல்லாம் அவர்களோடு உரையாடுவது அவரது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
எப்போதெல்லாம் போன் செய்யும் போது " என்னப்பா எங்கள எல்லாம் மறந்துட்டீங்களா?"
என்று கேட்டு அனைத்து நண்பர்களும் விசாரிப்பார்.
குழந்தைகளை குடும்ப
உறுப்பினர்கள் அனைவரையும் விசாரிப்பது வழக்கம்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக...
கார்மல் பள்ளி எவ்வாறு இருக்கின்றது?
சேவியர் எல்லாம் எவ்வாறு இருக்கின்றது என்று கேட்க ஒருபோதும் மறந்ததில்லை.

'என்ன சார் கார்மல் பற்றியே கேட்கின்றீர்கள்?' என்று கேட்டால்...

'என்ன செய்றது தம்பி...
நான் என் குடும்பத்தாரோடு வாழ்ந்த காலத்தை விட கார்மலில் வாழ்ந்த காலம்தான் அதிகம்..'
என்று பதில் கூறுவர்.

1998 ஆம் ஆண்டு
மார்ச் 18 ஆம் நாள்
நான் கார்மல் பள்ளியில் அடியெடுத்து வைத்த போது...
வெளிமாவட்டத்தைச் சார்ந்தவன் என்ற நிலையில் கொஞ்சம் விலகியே இருக்க வேண்டிய சூழல்...
அப்போதெல்லாம் என்னை செம்புலப் பெயல் நீர் போல்
தன்னுள் கலக்கச் செய்தவர்.
நான் இருதயராஜ் சார் பிரின்ஸ் சார் ஜோ
அதன் பின்பு வந்து சேர்ந்த பிரபாகர் ஞானசீலன் சார்
திண்டுக்கல் ஜாண் டி பிரிட்டோ.. என்று ஒரு நட்பு வட்டாரங்கள் அவருடன் கதை பேசிக் கொண்டிருக்கும்.

எங்களுக்கு முன்பு கஷ்மீர் சார், சந்தானம் சார், தர்மராஜ் சார், மார்சலின்
இவர்களுடன் 
அமலதாஸ் தந்தை என்று
ஒரு நட்பு வட்டம்...

அனைத்தும் பசுமை நினைவுகள்.



இன்று மீளா உறக்கத்தில் துயில் கொண்ட நண்பரை காண அந்த நட்பு வட்டங்கள்
சுற்றி நின்று அஞ்சலி செலுத்தினர்.
அப்போது கூட அவரது உதடு "என்ன தர்மா நலமா?"
"என்ன தோமி இப்பதான் நேரம் கிடைத்ததா?"
என்று கேட்பது போல இருந்தது.

சந்தானம் சார் பற்றி அடிக்கடி கூறுவார்.
அவரது டிரஸ் கோடு பற்றி
பெருமையாக கூறுவார்.

திரு. இருதயராஜ் ஆசிரியரால் விட முடியாத பழக்கம் புகை பிடித்தல்.

தொடர்ச்சியாக புகை பிடிப்பது.
காலையில் எழுந்தவுடன் பள்ளி முன் உள்ள முத்து டீ கடையில் ஒரு குவளை தேனீருடன் ஆரம்பமாகும் புகை ...
இரவு உணவு முடித்ததும்
அறையில் வந்து டேபிள் விளக்கின் முன் மறுநாள் வகுப்பிற்கு தேவையான பாட குறிப்புகளை தயார் செய்து உரையாடும் போது
நிறைவடையும்.

இன்று அவர் மறைந்த போது அவருக்கு விருப்பமான அந்த சிகிரெட்டை மாலையாக கோர்த்து அணிந்து இருந்தனர்.

காலம் முழுவதும் கடவுளுக்காக பாடல் இசை ஊழியம் செய்த அந்த காந்தி சார்
இந்து மத சடங்கில் தான் அடக்கம் செய்யப்பட்டார்.
அருட்தந்தை அமலதாஸ் சேவியர் அவர்கள் இறுதி ஜெபம் நடைபெற்றது
அவர்களது குழந்தைகளுக்கும் துணைவியாருக்கும் கொஞ்சம் ஆறுதல்.
    மதம் என்பது வெறும் அடையாளம் தான்... அதனையும் தாண்டி மனித நேயப் பயணம் ஒன்று உள்ளது....

----நினைவுகள் பேசும்