Friday, March 17, 2023

இடைநிற்றலை தவிர்க்கும் முயற்சியில்....


இடைநிற்றலை தவிர்ப்போம்!
--ஜே.ஆ.டோமினிக் ராஜ்
17.03.23, வெள்ளிக்கிழமை.
---------

முகேஷ் வருண்...
ஆறாம் வகுப்பு படிக்கும் எனது வகுப்பு மாணவர்.
இந்த மாதம் தொடர்ந்து பள்ளிக்கு வரவில்லை..
அலைபேசியில் தொடர்பு கொண்டு
தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாகவே கூறியது.
சரி வீட்டில் சென்று பார்த்து வரலாம்
என்று நேற்று மாலை அவனது இல்லத்திற்கு சென்றோம்.
வீட்டில் யாரும் இல்லை.
இவர் மட்டும் எங்களைப் பார்த்த பின்பு
மாடியில் உள்ள அவரது வீட்டின் புற வாசல் வழியாக
வெளியில் சென்று மொட்டை  மாடிக்குச் சென்றுள்ளார். 
அவன் தங்கை கூறியதன் அடிப்படையில்
நாங்கள் மாடிக்கு சென்று பார்த்த போது
அங்கும் காணவில்லை.
அடுத்த மாடிக்கு தாவி
கில்லி விஜய்  ... 
போல
ஓடி இருப்பான் போல் தெரிகிறது.
சரி நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று 
இன்று மதியம் அவனை சந்திக்க சென்றேன்.
ஐயா திங்கள்கிழமை பள்ளிக்கு வந்து விடுகிறேன் என்று கூறினார்.
எவ்வளவோ வற்புறுத்தியதற்கு பின்பும்
கீறல் விழுந்த ரிக்கார்டை போல
அதனையே கூறிக் கொண்டிருந்ததால்
கோபத்தில் ஒரு அடி கொடுத்து விட்டு
பள்ளிக்கு வந்து விட்டேன்.
மனசு எல்லாம் முகேஷ் வருணாக வந்து நின்றான்
வகுப்பில் கவனம் செலுத்த இயலவில்லை.
அவன் பாட்டிக்கு   போன் செய்தேன்.

சார் ஜெப்ரி என்ற பையன்
பள்ளிக்கு வந்தால் முகேஷை
அடிப்பதாக கூறியிருக்கிறான்.
அதனால் தான் இவன் பள்ளி வர பயப்படுகின்றான்
என்று கூறினார்.
வகுப்பில் ஜெப்ரியுடன் பேசினேன்.

ஐயா நான் அப்படி எதுவுமே கூறவில்லை
என்று அவன் கூற...
சரி இன்று மாலை முகேஷ் வருணைப்  பார்க்கச் செல்லலாம்...
யாரெல்லாம் வருகிறார் ?
என்று கேட்க...
சரவணன், அருள்குமரன், ஜெப்ரி, ஆரோன், ஆன்றோ  ஜினோ.. என ஒரு 
படையே அணிவகுத்து வந்தது.

கார்மல் கேண்டியனிலிருந்து..
பலகாரங்களுடன் அவன் வீட்டிற்குள் நுழைந்தோம்.

ஐயா நேற்று நீங்கள் வந்திருப்பீர்கள் என நான் நினைக்கவில்லை.
வேறு ஆசிரியர்  வந்துள்ளார் என்று நினைத்து தான் ஓடினேன்..
என்று முகேஷ் கூறினார்.

ஒரு மணி நேரம் அவனுடன் உரையாடினோம்.
தந்தை இல்லாத குடும்பம்.
தாய் காலையிலேயே ஒரு கடைக்கு வேலைக்கு சென்று 
இரவு தான் வீடு திரும்புவார்.
அம்மாச்சி, தாத்தா 
தான் இவனை கவனித்துக் கொள்கின்றனர்.
அம்மாச்சி வீட்டு வேலைக்குச் சென்று விடுவதால்
முகேஷ்  வீட்டில் டிவியுடன்
நேரத்தை கழித்துக் கொண்டிருப்பதும்...
பிடிவாதமாக இருப்பதும்....
பள்ளி செல்ல இயலாமைக்கான 
காரணங்களை உருவாக்கிக் கொள்வதுமாக 
என்று இருந்துள்ளார்.
அவன் தாத்தா செல்லப்பா சிறந்த ஒரு
ஓவியர்,
பாட்டி மல்லிகா சிறந்த
சமையல் கலைஞர்.


தொடர்ந்து இவனை கண்காணிக்காமல் விட்டிருந்தால்
இவனும் பள்ளியை விட்டு
விலகி இருந்திருப்பான்.
நம் வகுப்பில் இதுபோன்ற மாணவர்கள்
உருவாகி இருக்கக் கூடாது என்பதற்கான சிறு முயற்சி.

தமிழ் வழி மாணவர்கள் என்பதால்
சக மாணவர்களை அழைத்து வருவதற்கு மற்ற மாணவர்களும்
உடன் வந்தனர்.


ஐந்தாம் வகுப்பு படிக்கும்
முகேஸ்வரூனின் தம்பி
செல்வ வருண்...
^ ஐயா அடுத்த வருஷம்
உங்க பள்ளியில் தான் வந்து சேரப் போகிறேன் ' என்றார்.
வாடா செல்லம் என்று அவனை வரவேற்று, மல்லிகா பாட்டி தந்த
மண மணக்கும் காப்பியை பருகி விடைபெற்றோம்.


வெள்ளிக் கிழமை
ஊரெல்லாம் சிலுவைப் பாதை...
நாங்கள் உருவாக்குவது
புதிய பாதை.