தகவல் தொழில்நுட்பம் குறித்த குறுவள மைய பயிற்சி இணையவழியில் நடைபெற்றது.
பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பயிற்சி சில பயனுள்ள தகவல்களை தந்துள்ளது. EMIS செயலியில் வருகைப் பதிவேடு பதிவு செய்வதில் உள்ள இடர்பாடுகள்...
அவற்றை தீர்க்கும் வழிகள் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. இணையவழியில் பள்ளிக்கல்வித் துறையின் பல்வேறு செயல்பாடுகளை அறிந்து கொள்ளக்கூடிய வெப்சைட்டுகள் மற்றும் மொபைல் செயலிகள் குறித்து தெரிந்துகொள்ள உதவியாக இருந்தது. எதிர்காலத்தில் தகவல்தொழில்நுட்ப பயன்பாடுதான் கற்றல் கற்பித்தலில் மேலோங்கி இருக்கும், அதற்கான பயிற்சிகளை அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் பயிற்சிகள் நடைபெற்றது.
வருகைப் பதிவு செய்வதிலும், தொடர்பு கொள்வதிலும் தொடக்கத்தில் பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும் அதன்பின் பயிற்சிகள் தெளிந்த நீரோட்டம் போல சென்று கொண்டிருந்தது. பல்வேறு பதிவேடுகள் பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இனிமேல் அவை மின்பதிவேடுகளாக மாற்றம் செய்யப்படும் என்று செய்தி வரவேற்கத்தக்கது . அது போல மாற்றுச் சான்றிதழ் வழங்குவது, மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகளிலும் மாணவர்கள் பற்றிய ஒருங்கிணைந்த தகவல்களை பதிவு செய்வது குறித்த தகவல்களும் பயனுள்ளதாக இருந்தன.
பள்ளி செயல்பாடுளை இணையவழியில் பதிவு செய்வது... சிறப்புக் குழந்தைகள் பற்றிய செய்திகளை கூறி அவர்களை எவ்வாறு நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்ற காணொளி... ஏற்கனவே அறிந்திருந்தாலும் தற்போது மீண்டும் அதனை கேட்டு அறியக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்தது.
பல்வேறு புள்ளி விவரங்களை தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ள தரவுகள் மாநிலத்திற்கு மிகப்பெரிய உதவியாக அமைந்துள்ளது என்ற தகவலும் சிறப்பு.
ஆசிரியர்கள் மனது வைத்தால் கல்வியில் மாற்றம் சாத்தியமே என்பதை பயிற்சி எடுத்துரைத்தது. இணையவழி கல்வி பயிற்சியில் பங்கேற்பவர்கள் கவனிக்கின்றனரா? என்று அறிந்துகொள்ள இயலாமையும் அதேபோல் பங்கேற்கும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்களுக்கான வாய்ப்பையும் பின்னூட்ட படிவம் அனுப்பும் முறைகளையும் முன்னமே கூறாதது ஒரு குறைபாடு. இதே போல தேநீர் இடைவேளை மதிய உணவு இடைவேளை போன்றவை குறிப்பிட்ட கால அளவிற்கு குறைவாக இருந்துள்ளது. முதல் முறையாக ஆசிரியர்களை இருக்கையில் ஒரே இடத்தில் அமர வைத்து நடத்தியது சோர்வை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து பல்வேறு மீம்ஸ்கள் புலன குழுக்களில் வந்து நகைச்சுவை ஊட்டியது படைப்பாற்றலின் மற்றொரு பரிணாமமாக பார்த்தேன் .
எங்கள் பள்ளியில் பயிற்சி மேறபார்வையாளராக கலந்துகொண்ட பயிற்றுநர் திருமதி.விஜி அவர்களுக்கு புத்தகம் பரிசளித்து நன்றி கூறினோம்.
🙏🏽
No comments:
Post a Comment