Tuesday, August 27, 2024

அறிவியலுக்கான அணிவகுப்பு

அறிவியலுக்காக அணிவகுப்போம்!
🏌️🏌️🏌️💦🧙
ஆறாம் வகுப்பு முதல் பருவம் இயல் 3 அறிவியலால் ஆள்வோம்
என்ற பாடத்திற்கான செயல்பாடு. 
27.08.2024
---------------------------------
ஆறாம் வகுப்பு  
தமிழ் பாட செயல்பாடாக அறிவியல் முழக்கங்களை தனித்தனியாக பதாகையில் எழுதி வர பணிந்திருந்தேன். 

மூன்று நாட்கள் விடுமுறை முடிந்து இன்று ஆர்வமுடன் ஒவ்வொரு மாணவரும் 
அவர்களுக்குத் தெரிந்த அறிவியல் முழக்கங்களை அவர்கள் கையெழுத்தில் அழகுற எழுதி வந்திருந்தனர். 

வரிசையாக வகுப்பறைக்கு வெளியே அழைத்துச் சென்றேன். 

பள்ளி வளாகத்தில் அந்த பதாகையை ஏந்தி அமர்ந்திருந்தனர். 

எங்கள் பள்ளியின் ஆற்றுப்படுத்துநர்
அருட்தந்தை எலியாஸ் சே.ச.
அவர்களை அழைத்து 
மாணவர்களிடம் ஒரு ஐந்து நிமிடம் உரையாற்ற வேண்டும் என்று கூறியதும்...
'எதைப் பற்றி 'என்று கேட்டார்? 
"வாருங்கள் எங்கள் மாணவர்களைப் பார்த்தவுடன் உங்களுக்கு தெரியும் ...
எதைப் பற்றி பேச வேண்டும் என்று..." கூறி அழைத்துச் சென்றேன். 

ஆறாம் வகுப்பு மழலை மாறாத முகம்...
ஆனால் ஒவ்வொரு குழந்தைகள் கையில் பிடித்திருந்த பதாகையை அவர் வாசிக்கச் சொன்னார். 

"அறிவியல் மக்களுக்கே!" என்றார் ஒருவர்...
"என் வழி அறிவியல் வழி "என்றார் மற்றொருவர்.

"ஏன் என்று கேள்.."
இது மற்றொருவர்..

"அறிவியல் சிந்தனை கொள்! "

"ஆய்வில் மூழ்கு..."

"அறிவியலை ஆக்கத்திற்காகப் பயன்படுத்துவோம்..."

என்று வரிசையாக அவர்கள் அவர்களுக்கு உரிய தொனியில் 
முழங்க அருட்தந்தை முகத்தில் ஆனந்தம். 

அவரும் அறிவியல் குறித்து உரையாட தொடங்கினார். 

அறிவியல் என்பது சமூக மாற்றத்திற்கான 
கருவி. 
ஏன் ?எதற்கு? எப்படி? என்ற வினாக்கள் கேட்பதன் வாயிலாகவே அறிவியல் வளர்ச்சி அடைகிறது. இன்று ஏராளமான 
புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி வருகின்றன. 
நீங்களும் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பவர்களாக மாற வேண்டும்.

அத்துடன் 
உங்கள் வகுப்பிற்கு யாராவது மாணவர் ஒருவர் தொடர்ந்து வரவில்லை என்றால் அவர் ஏன் வரவில்லை? என்ற கேள்வியை எழுப்பி அதற்குத் தீர்வு காண முயல வேண்டும். 

எப்போதும் ஜாதி மதம் கடந்து அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். 

ஏன் ஆப்பிள் மேலே செல்லாமல் கீழே விழுகின்றது? என்று கேட்டதால்தான் 
புவியீர்ப்பு விசையை நியூட்டன் கண்டுபிடித்தார். 
ஏன் பறவையைப் போல நம்மால் பறக்க முடியவில்லை? என்று கேட்டதால்தான் 
ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடித்தனர்.

அம்மா சமையல் செய்யும்போது 
பாத்திரத்தின் மூடி ஏன் வெளியே தள்ளிக் கொண்டே இருக்கின்றது.? 
அதற்கான சக்தி என்ன? 
என்று கேட்டதால்தான் நீராவி என்ஜின் கண்டுபிடிக்கப்பட்டது. 
எனவே நீங்களும் கேள்வி கேளுங்கள். 
உங்கள் ஆசிரியரிடம், உங்கள் பெற்றோரிடம், பெரியவர்களிடம், உங்கள் கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளை கண்டறியும் போது நீங்களும் ஒரு விஞ்ஞானிகளாக உருவாகலாம். 
என்று அழகாக எடுத்துரைத்தார்.

மாணவர்கள் அனைவரும்  அறிவியல் முழக்க
பதாகையை  ஏந்தி
வளாகத்தில் முழக்கம் எழுப்பி வலம் வந்தனர். 

அறிவியலுக்காக அணிவகுத்து நின்றனர். 

இறுதியில் 
அறிவியல் மனப்பான்மை தின உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்! 

தமிழ் பாடம்தான்.
வெறும் A-4 தாளில்
செயல்பாடுகளை முடித்து விடாமல் 
அதனை அறிவியல் களச் செயல்பாடாக மாற்றி அனைத்து குழந்தைகளையும் அறிவியல் முழக்கம் எழுப்பி உறுதிமொழி எடுக்க வைத்தது சிறந்த செயல்பாடாக அமைந்தது. 

அனைவருடைய முகத்திலும் புன்னகை கலந்த நம்பிக்கையைக் காணும் போது நிச்சயம் இவர்கள் 
அறிவியலை   ஆள்வார்கள்...
அறிவியல் மனப்பான்மையுடன் 
வாழ்வார்கள்...
 என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. 
👍
--- ஜே.ஆ.டோமினிக் ராஜ்.
தமிழ் ஐயா.🤝

No comments:

Post a Comment